Pages

Sunday 22 July 2012

இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு சர்வதேசத்தின் கவனத்தைப் பெறுமா?

1/


2/
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் எப்படி வெற்றி கொள்ளப்பட்டது என்பதை மையப்படுத்தி கடந்த ஆண்டு பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்திய இலங்கை இராணுவம், இம்முறை போருக்குப் பிந்திய நிலைமைகளை மையப்படுத்தி இரண்டாவது கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளது.

தீவிரவாதத்தைத் தோற்கடித்த சிறிலங்காவின் அனுபவங்கள் என்ற தொனிப்பொருளில் கடந்த ஆண்டு மே மாதம் 31ம் திகதி தொடக்கம் யூன் 2ம் திகதி வரை முதலாவது பாதுகாப்புக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அந்தக் கருத்தரங்கில் பங்கேற்கக் கூடாது என்று உலக நாடுகளை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரியிருந்தன. 

இறுதிக்கட்டப் போரில் இலங்கைப் படையினரால் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும் அதனைத் தமது சாதனையாக வெளிப்படுத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க வேண்டாம் என்றும் சா்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள் கோரியிருந்தன.

இந்தக் கோரிக்கை சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.
அதன் காரணமாக மேற்குலக நாடுகள் பல தமது அதிகாரபூர்வ பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவில்லை. அல்லது அனுப்புவதாக உறுதியளித்துவிட்டு கடைசி நேரத்தில் விலகிக்கொண்டன.

இந்தக் கருத்தரங்கிற்கு பிரதிநிதிகளை அனுப்புமாறு ஐ.நா. உள்ளிட்ட 54 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு. அழைப்பு அனுப்பப்பட்ட நாடுகளில் கணிசமானவை அதை நிராகரித்து விட்டன.

இதனால் சிறிய, முக்கியத்துவம் இல்லாத பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளின் இராணுவப் பிரதிநிதிகளை அழைத்து வந்து அந்தக் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது அரசாங்கம்.

இதனால் வெளிநாட்டு இராணுவப் பிரதிநிதிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் வெறுமையாகக் கிடக்க இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் அந்த இடங்களை நிரப்பினர்.

இந்தக் கருத்தரங்கில் 42 நாடுகளின் 300 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாக கருத்தரங்கு ஆரம்பிப்பதற்கு முதல் நாள் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரிய கூறியிருந்தார்.

ஆனால் அந்தக் கருத்தரங்கில் 41 நாடுகளின் 80ற்கும் அதிகமான பிரதிநிதிகளே பங்கேற்றதாக கடைசியில் அறிவிக்கப்பட்டது.

இந்த 41 நாடுகளுக்குள் இலஙங்கையும் அடங்கியிருந்தது. அழைப்பு விடுக்கப்பட்ட 54 நாடுகளில், 41 நாடுகள் பங்கேற்றதாகக் கருதக்கூடாது. இந்தக் கருத்தரங்கிற்கு இலங்கை அரசினால் அழைக்கப்படாத 15ற்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை அரசினால் தெரிவு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட பாதியளவு நாடுகள் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணித்திருந்தன.

பல நாடுகள் பார்வையாளர்களாக கொழும்பிலுள்ள தமது தூதுவர்களையும், இராணுவ ஆலோசகர்களையும் அனுப்பி வைத்தன. முதலாவது இராணுவக் கருத்தரங்கு சர்ச்சைகளுக்குரியதாக இருந்தநிலையில் இம்முறை மிகக் கவனமாகத் தொனிப்பொருளை தேர்ந்தெடுத்துள்ளது இராணுவம்.

இதுமட்டுமன்றி இம்முறை 63 நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடக்கவுள்ள இந்த மூன்று நாள் கருத்தரங்கின் தொனிப்பொருள் நிலையான அமைதி உறுதிப்பாட்டை நோக்கி என்பதாகும்.

போருக்குப் பிந்திய சூழலில் இலங்கைப் படையினர், நாட்டின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான வளர்ச்சியில் எவ்வாறு பங்களிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. 

5 (R) தான் என சுருக்கமாக அமைக்கப்படும் 
-மீள்கட்டுமானம் (Reconstruction),
-மீள்குடியேற்றம் (Resettlement), 
-புனர்வாழ்வு(Rehabilitation),
-மீள் ஒருங்கிணைப்பு(Reintegration),
-நல்லிணக்கம்(Reconciliation)

ஆகியனவே இந்தக் கருத்தரங்கின் முதன்மையான விடயங்களாக இருக்கும்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதை அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் உறுதி செய்துள்ளதாகவும் சில நாடுகள் தமது உயர்மட்ட அரசகுழுவை அனுப்புவது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

-முதல்நாள் அமர்வு மீள்கட்டுமானம் மற்றும் மீள்குடியமர்வு குறித்ததாக இருக்கும்.
-இரண்டாம் நாள் அமர்வு புனர்வாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு பற்றியதாக இருக்கும்.
-மூன்றாம் நாள் அமர்வு நல்லிணக்கம் பற்றியதாக இருக்கும்.இந்தக் கருத்தரங்கில் 22 வல்லுனர்களும், இராணுவ அதிகாரிகளும் உரையாற்றவுள்ளனர்.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பேச்சாளர்கள் வரவுள்ளனர். இவர்களை விடஇந்த விவகாரங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள். படை அதிகாரிகள், அரச அதிகாரிகளும் உரையாற்றவுள்ளனர்.

இந்தக கருத்தரங்கிற்கு 63 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் கடந்த 10ம் திகதி வரை 14 நாடுகளின் 24 பிரதிநிதிகள் வருகையை உறுதி செய்துள்ளனர்.

இம்முறை போர் பற்றிக் கருத்தரங்கு நடத்தினால் அதற்கு எந்தளவு வரவேற்பு இருக்கும் என்று தெரியாத நிலையில் தான் அரசாங்கம் தனது பாதையை மாற்றிக்கொண்டுள்ளது.

சர்வதேச அளவில் இப்போது வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இலங்கை இராணுவத்தின் தலையீடு குறித்து பேசப்படுகிறது. வடக்கில் இராணுவத் தலையீடுகள் பற்றிய சர்ச்சைகளுக்கு முடிவு கட்டவும் அதிகப்படையினரை இலங்கை அபிவிருத்திக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதைக் காட்டவுமே இந்த ஏற்பாடு. கடந்த முறைபோன்று இம்முறை இந்தக் கருத்தரங்கு தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இது இலங்கை இராணுவத்துக்குச் சாதகமான ஒன்று.

அதைவிட இந்தமுறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தொனிப்பொருள் பல கேள்விகள் சந்தேகங்களுக்கு சர்வதேச சமூகம் விடைகாண விரும்பும் விடயங்களை ஒட்டியதாகவுள்ளது. எனவே இம்முறை அதிகளவு நாடுகள் பங்கேற்கலாம். (Tamilwin

Home            Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment